விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் 225 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 225 பேர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் 225 பேர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளையும், காவல்துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில துணைசெயலாளர் தளபதி சுந்தர் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.கே.குமார், தொகுதி செயலாளர் யோகா, ஒன்றிய செயலாளர் ஈசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான ஆயில் மில் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும், நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அப்போது போலீசார் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 225 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com