இன்று தளர்வில்லாத ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள்

இன்று தளர்வில்லாத ஊரடங்கு என்பதால், திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று தளர்வில்லாத ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள்
Published on

திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித தளர்வும் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டு விடும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

ஆனால், ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கினர். அதன்படி திண்டுக்கல்லில் நேற்று பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு திரண்டனர். திண்டுக்கல் நகர் மட்டுமின்றி புறநகரை சேர்ந்தவர்களும் நகருக்கு வந்தனர். இதனால் பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

இறைச்சி-மீன் விற்பனை

மேலும் அசைவ பிரியர்கள் 2 நாட்களுக்கு தேவையான இறைச்சி, மீன் வாங்கினர். இதற்கு வசதியாக திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் மீன் மார்க்கெட்டுக்கு வெளியே மீன்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் தற்காலிக மீன்கடைகள் இருந்தன. அனைத்து மீன்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் கூட்டத்துக்கு குறைவில்லை.

அதேபோல் மது பிரியர்கள், மதுபானம் வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் அனைத்து மதுக்கடைகளிலும் மாலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேநேரம் பொருட் களை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் திரண்டதால், திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று, நெரிசலை சரிசெய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com