வறுமையில் வாடிய தொழிலாளிக்கு நிவாரண உதவி

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடிய தொழிலாளிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உதவி செய்தனர்.
வறுமையில் வாடிய தொழிலாளிக்கு நிவாரண உதவி
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகேயுள்ள கூடலூர் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 70).

இவர் தனது மனைவி விஜயாவுடன் சென்னையில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊரான கூடலூருக்கு திரும்பினர்.

அதன்பின்னர் அவர்கள் பூ கட்டும் தொழில் செய்து வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் பூ கட்டும் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் வருமானம் இன்றி தவித்தனர்.

மேலும் அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசு வழங்கும் சலுகைகளை பெறமுடியவில்லை.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு விஜயா தொடர்பு கொண்டு தங்களது குறைகளை கூறி உதவி செய்யும்படி கூறினார்.

அதன்பேரில் கம்பம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கூடலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் விஜயா வீட்டுக்கு நேரில் சென்று நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்களுக்கு வருமானம் இல்லாததை அதிகாரிகள் அறிந்தனர். இதையடுத்து விஜயா குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வருவாய் ஆய்வாளர் வழங்கினார்.

மேலும் ரேஷன் கார்டு வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com