லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம்: கர்நாடக காங்கிரஸ் அரசின் தேர்தல் மாயாஜாலம் - எடியூரப்பா

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் என்பது கர்நாடக காங்கிரஸ் அரசின் தேர்தல் மாயாஜாலம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம்: கர்நாடக காங்கிரஸ் அரசின் தேர்தல் மாயாஜாலம் - எடியூரப்பா
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லிங்காயத் மற்றும் வீரசைவ லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது கர்நாடக காங்கிரஸ் அரசின் தேர்தல் மாயாஜாலம். உணர்வுப்பூர்வமான விஷயத்தில் சித்தராமையா மக்களை பிரிக்கிறார். இது மக்களை திசை திருப்பும் செயல். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது, இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்.

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவில் அகில இந்திய வீரசைவ மகாசபா எடுக்கும் முடிவை பா.ஜனதா ஆதரிக்கும். இது தான் பா.ஜனதாவின் நிலைப்பாடாக இருக்கும். இதே போல் பல்வேறு சமூகங்கள் முன்வைக்கும் கோரிக்கையை சித்தராமையா நிறைவேற்றுவாரா?. அவருடைய நோக்கம் தான் என்ன?. பலதரப்பட்ட சமூகங்கள், பல கோரிக்கைகளை அரசிடம் விடுக்கின்றன. அந்த கோரிக்கைகளை எல்லாம் அரசால் நிறைவேற்ற முடியுமா?.

பல்வேறு சமூகங்கள் இடையே வெறுப்புணர்வு விதைகளை விதைப்பதை தவிர அரசின் இந்த முடிவின் நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்?. உண்மையிலேயே அரசுக்கு லிங்காயத் விவகாரத்தில் அக்கறை இருந்திருந்தால், வீரசைவ மகாசபா எடுக்கும் முடிவை ஏற்பதாக கூறி இருக்க வேண்டும். அதை இந்த அரசு செய்யவில்லை. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக ஒருவர் எந்த அளவுக்கு கீழ்தரமாக இறங்குவார் என்பதற்கு சித்தராமையா ஒரு சிறந்த உதாரணம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி எம்.எல்.ஏ. எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். இவர் கடந்த தேர்தலில் விஜயாப்புரா மாவட்டம் தேவரஹிப்பரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். முன்னதாக இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைவார் என பேசப்பட்டது. அக்கட்சி சார்பில் வருகிற தேர்தலில் முத்தேபிகால் தொகுதி வேட்பாளராக ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென அவர் பா.ஜனதாவில் சேர்ந்தது ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com