புதுச்சேரியில் பேனர்கள் அகற்றம்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அரசு உத்தரவை தொடர்ந்து புதுச்சேரியில் பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. அப்போது அதிகாரி களுடன் பேனர்கள் வைத்தவர்கள் வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பேனர்கள் அகற்றம்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Published on

புதுச்சேரி,

சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரான சுபஸ்ரீ பரிதாபமாக செத்தார். இந்த விபரீத சம்பவத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், முக்கிய அமைப்புகளும் ஆட்சேபம் தெரிவித்ததுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

அதேபோல் புதுச்சேரியிலும் பேனர்கள் வைக்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் அரசு அனுமதியின்றி பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு அதிகாரிகள் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நகரின் முக்கிய சந்திப்புகளில் உள்ள பேனர்களை அவற்றை வைத்தவர்களே தாமாக முன்வந்து அகற்றி வருகின்றனர். மேலும் பேனர்களை அகற்ற உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளையொட்டி பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் வாழ்த்து பேனர்களை வைத்திருந்தனர். அந்த பேனர்களை கட்சியின் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அந்த கட்சியினர் தாங்களே முன்வந்து அகற்றினார்கள். மற்ற பகுதியில் வைத்திருந்த பேனர்களையும் பா.ஜ.க.வினர் அகற்றினார்கள். அதேபோல் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் காங்கிரசார் அகற்றினார்கள்.

அதுமட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டன.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் ஆகிய ஊர்களில் கடைத்தெரு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை வரவேற்கும் வகையில் பல்வேறு கோணங்களில் 50-க்கும் மேற்பட்ட பேனர்கள் சாலைகளை மறைத்தபடி வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் பஞ்சாயத்து முதுநிலைப்பொறியாளர் நாகராஜ், இளநிலைப்பொறியாளர் பாஸ்கர் முன்னிலையில் ஊழியர்கள் அகற்றி டிராக்டர்களில் ஏற்றி சென்றனர்.

திருபுவனைபாளையம் கடலூர் சாலை, மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் ஆகிய பகுதியில் நடைபெற்ற திருமண விழா பேனரையும் அகற்றினார்கள். அப்போது அவர்களுடன் சில இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்டார்கோவில் பகுதியில் கோபிகா எம்.எல்.ஏவின் உறவினரும், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருமான இளையராஜா தனது பிறந்தநாளையொட்டி ஆதரவாளர்களுடன் சேர்ந்து பேனர் வைத்துக்கொண்டிருந்தார். அதனை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் விரைந்து வந்து தகராறு செய்தவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மற்ற பேனர்களும் அகற்றப்பட்டன.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில் அரியாங்குப்பம், காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம், நோணாங்குப்பம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினார்கள். அப்போது உதவி பொறியாளர் யுவராஜ், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர்கள் சுரேஷ், ரகுராமன் மற்றும் ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

இதற்கு சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com