கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தடுப்புகள் அகற்றம்

திருப்பூர் அருகே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மங்கலத்தில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தடுப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தடுப்புகள் அகற்றம்
Published on

மங்கலம்,

மங்கலம் பகுதியில் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது வருவாய்த்துறையினரால், மங்கலம் பகுதியானது கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மங்கலம் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு முக்கிய சாலைகளை அடைத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

மங்கலம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டர்கள் வசித்த பகுதிகளான கே.கே.நகர், பெரியபள்ளி வாசல் தெரு, சத்யா நகர், ரோஸ் கார்டன், ரம்யா கார்டன் ஆகிய பகுதியில் மொத்தமாக 6 தெருக்கள் அடைக்கப்பட்டன. இந்த தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேரும் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று மங்கலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் வசித்த கே.கே.நகர், பெரிய பள்ளிவாசல் தெரு, கொள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 தெருக்களில் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. இதில் மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி கலாராணி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, மங்கலம் சுகாதார ஆய்வாளர் சிவநாதன் ஆகியோர் முன்னிலையில் 3 தெருக்கள் திறக்கப்பட்டது.

பின்னர் அந்த தெருக்களில் வசித்த பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்து கடைகளில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச்சென்றனர். மேலும் ஒரு வாரத்திற்குள் சத்யா நகர், ரோஸ் கார்டன், ரம்யா கார்டன் பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள 3 தெருக்களும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com