விழுப்புரத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை

விழுப்புரத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினார்கள்.
விழுப்புரத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகருக்கு செல்லும் சாலையில் மருதூர் ஏரிக்கு செல்லக்கூடிய நீர்வரத்து வாய்க்கால்கள் உள்ளது. இந்த வாய்க்கால்களை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்து சிலர் கடைகள் கட்டியுள்ளனர். இவ்வாறு சாலையின் இருபுறங்களிலும் வாய்க்கால் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கடைகள், கட்டிடங்கள் கட்டியுள்ளதால் அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளால் அந்த சாலையில் எந்தநேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்தனர். இதில் 10 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் தாசில்தார் சையத்மெகமூத், சார் ஆய்வாளர் கனகராஜ், மண்டல துணை தாசில்தார்கள் வெங்கடசுப்பிரமணியன், வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் வெங்கடபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் புஷ்பகாந்தன், முத்து, நில அளவையர் ஹரிபிரசாத் ஆகியோர் சுதாகர் நகர் செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஓட்டல், பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை என 5 கடைகளும் மற்றும் பிற கடைகளின் படிக்கட்டுகள், மேற்கூரைகள் ஆகியவை அதிரடியாக அகற்றப்பட்டது. இதனால் அந்த சாலை தற்போது விசாலமாக காட்சியளிக்கிறது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை தொடர்ந்து வாய்க்கால் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்கவும், வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் செல்ல வசதியாக சிமெண்டு மூலம் வாய்க்கால் கட்டவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com