திருவானைக்காவல், டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் வீடு-கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவானைக்காவல், டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவானைக்காவல், டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் வீடு-கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

திருச்சி,

பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ஷேக்அயூப் உத்தரவின்பேரில் திருவானைக்காவல் சன்னதிதெரு, பாரதிதெரு, மேல ஐந்தாம்பிரகாரம் மற்றும் உள்வீதிகளில் வீடு மற்றும் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, இளநிலை பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனையொட்டி அங்கு ஸ்ரீரங்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வகணேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தலைமை தபால் நிலையம் முதல் டி.வி.எஸ்.டோல்கேட் வரை சாலையின் இருபுறமும் 200-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று காலை அகற்றப்பட்டது. ஒரு சில கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளின் முன்பு இருந்த பலகைகள், விளம்பர பதாகைகள், பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினார்கள்.

இதற்கிடையே முன்னறிவிப்பு இன்றி திடீரென ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபடுவதாக வியாபாரிகள் சிலர் குற்றம்சாட்டினர். அவர்கள் டி.வி.எஸ்.டோல்கேட் அருகே திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்காமல் எப்படி கடைகளின் முன்புள்ள மேற்கூரைகளை அகற்றலாம் என்று கூறினர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி கண்டோன்மெண்ட் மற்றும் கே.கே.நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் கூறுகையில், திருச்சியில் காந்தி மார்க்கெட் முதல் பால்பண்ணை வரையும், ஜங்ஷன், பாலக்கரை, பொன்மலைப்பட்டிரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்யும் பணி நடைபெற உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com