ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு

விழுப்புரம் அருகே ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ப.வில்லியனூர், பஞ்சமாதேவி, மோட்சகுளம், தாங்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஏரி, தாங்கல் ஏரிகளுக்கு மழைக்காலங்களின்போது நரி ஆற்றின் மூலம் தண்ணீர் வரும். அவ்வாறு வரும் தண்ணீர் மூலம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பெருகும். குடிநீர் பற்றாக்குறையும் நீங்கும்.

ஆனால் ஏரிகளுக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க் கால்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வருவது தடையாக உள்ளது. அதேபோல் மலட்டாற்றில் இருந்து நரி ஓடைக்கு நீர் வரும் பாதையையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் போய்விட்டது.

மேலும் கடும் வறட்சி காலத்தில் நிலத்தடி நீரும் வெகு ஆழத்தில் சென்றுவிட்டதால் மின் மோட்டார் மூலம் நீர் இறைக்க முடியவில்லை. எனவே நரி ஓடை ஆக்கிரமிப்பையும், ஆழங்கால் வாய்க்கால் மூலம் நரி ஓடைக்கு வரும் நீர்வழி பாதையை தடை செய்துள்ள ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றுவதற்கு பொதுப்பணித்துறையினர் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுசம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com