மதுக்கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

மதுக்கடையை அகற்றக்கோரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவில் பதாகை பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், இது தொடர்பான கோரிக்கை மனுக்களை தங்கள் கையில் ஏந்தியபடி மதுக்கடையை மூடக்கோரி கோஷமிட்டனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:- ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியில் பள்ளிக் கூடம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் மதுபிரியர்கள், போதை தலைக்கேறியதும் சாலையிலேயே படுத்து புரண்டுவிடுகிறார்கள்.

இதனால் அந்த வழியாக பள்ளி மாணவிகள், பெண்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை அவர்கள், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் எடுக்கப்படுவதாக கூறி நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, போளிவாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் சவுடு மண் எடுக்க அரசு உரிமம் வழங்கியதை தொடர்ந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக ஆழம்தோண்டி சவுடுமண் எடுத்து செல்கிறார்கள். இதை நாங்கள் கண்டித்தால் குவாரியில் உள்ளவர்கள் எங்களை மிரட்டி தாக்க வருகிறார்கள். எனவே இதன் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்து விட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com