ஹூமாயூன் மகாலை சுண்ணாம்பு கலவை மூலம் புதுப்பிக்கும் பணி: லண்டன் என்ஜினீயர்கள் பாராட்டு

பாரம்பரிய முறைப்படி மாடுகள் மூலம் சுண்ணாம்பு கலவையை அரைத்து நடைபெறும் ஹூமாயூன் மகால் புனரமைக்கும் பணியை லண்டன் என்ஜினீயர்கள் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் ‘எங்கள் முன்னோர்கள் (ஆங்கிலேயர்கள்) கட்டிய கட்டிடத்தை பேணி பாதுகாத்து வரும் தமிழக அரசை வெகுவாக பாராட்டினர்.
ஹூமாயூன் மகாலை சுண்ணாம்பு கலவை மூலம் புதுப்பிக்கும் பணி: லண்டன் என்ஜினீயர்கள் பாராட்டு
Published on

சென்னை,

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான பாரம் பரியமிக்க கட்டிடம் ஹூமாயூன் மகால். 1770-ம் ஆண்டு இந்தோசரசெனிக் கட்டமைப்பில் கட்டப்பட்ட இந்த ஹூமாயூன் மகால் 81 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த கட்டிடத்தில் ஜன்னல்கள் கிடையாது. இந்த கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் வருவாய் அலுவலகமாக பயன்படுத்தி உள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டிடம் மூடியே கிடக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க ஹூமாயூன் மகாலை மீட்டெடுப்பதுடன், பாரம்பரிய முறைப்படி சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.34 கோடி நிதி ஒதுக்கினார். அதைத் தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த கட்டிட பூச்சு கலவைக்கு சிமெண்டு, சாதாரண வகை மணல் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, பாரம்பரிய முறைப்படி சுண்ணாம்பு, மணல், முட்டை, கடுக்காய் பனைவெல்லம் போன்றவற்றை அரைத்து கலவை தயாரிக்கும் பணி கடந்த மாதம் 20-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

பூச்சு வேலைக்கு தேவையான மொகல் பிளாஸ்டரிங் என்று அழைக்கப்படும் சுண்ணாம்பு கலவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 300 சதுர அடிக்கு தேவையான சுண்ணாம்பு கலவையை மாடுகள் உதவியுடன் அரைக்கும் பணி நடக்கிறது.

இந்த பணியை பார்வையிட, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஜார்ஜ் மற்றும் ரோய்ஷின் ஆகியோர் வந்தனர். அவர் களை தமிழக பொதுப்பணித்துறை இணைத்தலைமை என்ஜினீயர் கே.பி.சத்தியமூர்த்தி, கண்காணிப்பு என்ஜினீயர் சி.கல்யாணசுந்தரம் ஆகியோர் வரவேற்று, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் செயல்படும் பழமையான கட்டிடங்களை சுற்றி காண்பித்து பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

பின்னர் லண்டன் என்ஜினீயர்கள் ஜார்ஜ் மற்றும் ரோய்ஷின் ஆகியோர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

இந்தியாவில் எங்களுடைய முன்னோர்கள் ஆட்சி செய்த போது பல வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களை கட்டி உள்ளனர். இந்த கட்டிடங்களின் நிலை என்ன? என்பது குறித்து பார்வையிடுவதற்காக வந்தோம். முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டோம். அப்போது தமிழக அரசு எங்கள் முன்னோர்கள் கட்டிய கட்டிடத்தை பாரம்பரிய முறைப்படி மாடுகள் உதவியுடன் சுண்ணாம்பு கலவை தயாரித்து புனரமைத்து வருவதாக தெரியவந்தது.

அதனடிப்படையில் இங்கு பார்வையிட வந்தோம். இதேபோன்று எங்கள் நாட்டிலும் பல பாரம்பரியமான கட்டிடங்கள் உள்ளன. அதில் சிதிலமடைந்த கட்டிடத்தை தமிழகத்தில் தற்போது புனரமைப்பது போன்று சீரமைக்க திட்டமிட்டு உள்ளோம். ஆனால் இங்கு கிடைப்பது போன்று மூலப்பொருட்கள் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

பழமையை போற்றும் வகையில் 200 ஆண்டுகளுக்கு மேலாகவும் கட்டிடங்களை பராமரித்து பயன்பாட்டில் வைத்து இருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com