மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட அரசு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு

மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட அரசு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட அரசு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
Published on

திண்டுக்கல்,

நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்ட அரசு மதுக்கடைகள், தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் மூடப்பட்ட அரசு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலம் அருகே மூடப்பட்ட அரசு மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி ரெயில் பயணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், நாகல்நகர் மேம்பாலம் அருகில் மீண்டும் அரசு மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 24 மணி நேரமும் அந்த பகுதியில் மது விற்கப்படுகிறது. மதுப்பிரியர்கள் போதையில் சாலையில் செல்வோரை தொந்தரவு செய்கின்றனர். இதனால் ரெயில் பயணிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஒட்டன்சத்திரம் தாலுகா பெரியகோட்டையில் அரசு மதுக்கடை திறப்பதை எதிர்த்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், பெரியகோட்டை அருகேயுள்ள 16 புதூரில் செயல்பட்ட அரசு மதுக்கடை மூடப்பட்டு விட்டது. தற்போது பெரியகோட்டையில் இருந்து 16 புதூர் செல்லும் சாலையில் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த இடத்தின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, விவசாய நிலங் கள் உள்ளன. இதனால் மாணவிகளுக்கும், விவசாய வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. எனவே, மதுக்கடையை திறக்கக் கூடாது, என்று கூறினர்.

மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து கலால்துறை உதவி ஆணையர் கமலக்கண்ணன் கூறுகையில், விதிகள் தளர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் அரசு மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் மட்டுமே திறக் கப்படுகின்றன. புதிய கடைகள் திறக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் முன்பு 160 மதுக் கடைகள் இருந்தன. தற்போது 148 மதுக்கடைகள் மட்டுமே செயல்படுகின்றன, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com