தார்சாலை அமைக்க கோரி, கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்து மனு

தார்சாலை அமைக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்தவர் களால் பரபரப்பு ஏற்பட்டது.
தார்சாலை அமைக்க கோரி, கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்து மனு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் முகமது ரபீக் தலைமையில், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாபர் உள்பட நிர்வாகிகள் வந்தனர். மாநகராட்சி 29-வது வார்டு அரியமங்கலம் திடீர் நகருக்கு செல்லும் முக்கிய சாலை சுமார் 1 கி.மீ. நீளத்திற்கு குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரி ஜல்லி கற்கள், மற்றும் சிமெண்டு கலவையுடன் கூடிய தட்டுகளை ஏந்தி வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

லால்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மேல வாளாடிக்கு ரெயில்வே மேம்பாலத்திற்கு அடியில் உள்ள ரெயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும். பள்ளி குழந்தைகள் தினமும் இந்த வழியாக தான் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கும் இது தான் பாதை. விவசாய பணிகளுக்கான வாகனங்களும் இந்த வழியாக தான் செல்கின்றன. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இந்த பாதையை மூடிவிட்டு அதற்கு பதிலாக ரெடிமேட் ஆக தயாரிக்கப்பட்ட குறும்பாலம் போன்ற சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடங்கி இருப்பதால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி புதுக்குடி கிராம மக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் முருகானந்தம் திருச்சி மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாத 97 மழலையர் பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அறியாமையால் இந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் பொன்.முருகேசன் முசிறி தாலுகா சிட்டிலரை கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து வருகிற 20-ந்தேதி கோவில் நுழைவு போராட்டம் நடத்த இருப்பதால் இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டு மனு கொடுத்தார்.

தேனி மாவட்டம், போடி நாயக்கனூரை சேர்ந்த சகாயமேரி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் திருச்சியை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் எனது கணவர் உத்தமன் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு விசா முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். இதனை வாட்ஸ்-அப் மூலம் அவர் அனுப்பி வைத்து இருப்பதால் எனது கணவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

முசிறி தாலுகா பூலாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த பாப்பா பட்டி கிராமத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்படு கிறார்கள். இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் மனு கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com