ஆதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

ஆதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
Published on

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் 1996-ம் ஆண்டு அந்த சுகாதார நிலையத்திற்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அந்த கட்டிடத்தில் செயல்பட்டது. இங்கு புற நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளும், குழந்தைகளும், முதியவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவமும் பார்க்கப்பட்டது.

ஆதனூர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களான குடிக்காடு, கொட்டரை, பிலிமிசை, கூத்தூர், குறிஞ்சிப்பாடி, நொச்சிகுளம், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால், சில்லக்குடி, காரைப்பாடி, ஜமீன்ஆத்தூர், பாலாம்பாடி போன்ற கிராமங்களில் இருந்து நோயாளிகள் இந்த சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

போதிய இடவசதி இல்லை

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. மின்சார இணைப்பு பாதிப்படைந்தது. இது குறித்து சுகாதார நிலைய டாக்டர் அளித்த தகவலின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் அந்த கட்டிடத்தை பார்வையிட்டார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட துணை சுகாதார இயக்குனரின் உத்தரவின்பேரில் ஆரம்ப சுகாதார நிலையம், அதே ஊரில் செயல்படும் துணை சுகாதார நிலையம் (செவிலியர் குடியிருப்பு) கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு செயல்பட்டு வருகிறது.

தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வரும் கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமமடைகின்றனா. மேலும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுவது கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணிகள் இளைப்பாற காற்றோட்டமான இடவசதி இல்லை.

புதிய கட்டிடம்

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படாததால், கர்ப்பிணிகள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com