சுதந்திர போராட்டத்தை எடுத்துக் கூற மகாத்மா காந்தி வந்த இடத்தில் நினைவு தூண் அமைக்க கோரிக்கை

சுதந்திர போராட்டத்தை எடுத்துக் கூற பரமக்குடி யில் மகாத்மா காந்தி வந்த இடத்தில் நினைவு தூண் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுதந்திர போராட்டத்தை எடுத்துக் கூற மகாத்மா காந்தி வந்த இடத்தில் நினைவு தூண் அமைக்க கோரிக்கை
Published on

பரமக்குடி,

இந்திய சுதந்திரப்போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், சுதந்திர வேட்கை பொதுமக்களிடம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது சுதந்திரப்போராட்டத்திற்காக நிதி திரட்டவும், மக்களிடம் சுதந்திர போராட்டத்தை எடுத்துரைக்கவும் கடந்த 1.10.1927 அன்று மகாத்மா காந்தி பரமக்குடி வந்தார்.

அப்போது மேலச்சத்திரம் பகுதியில் திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் காந்தியடிகள் பேருரையாற்றினார். பின்பு பொதுமக்களிடம் (அந்த இடத்திலேயே) இப்போது உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை சுதந்திர போராட்டத்திற்காக நிதியாக தாருங்கள் எனக்கேட்டார். அங்கு கூடியிருந்தவர்கள் பணம், காசுகள் மட்டுமல்லாது தாங்கள் கழுத்து கை, காதுகளில் அணிந்திருந்த தங்க நகைகளையும் கழட்டி கொடுத்துள்ளனர்.

இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பரமக்குடிக்கு பெருமை சேர்த்துள்ளது. சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இதன் நினைவாக 27.10.1989 அன்று மகாத்மா காந்தி வந்து கால்பதித்து உரையாற்றிய அந்த இடத்தில் நினைவு கல் பதிக்கப்பட்டது. தற்போது அது கேட்பாரற்றும், பராமரிப்பின்றியும் உடைந்து கிடக்கிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கல்வெட்டை சுற்றி இரும்புத்தகடு அடித்து கல்வெட்டை பாதுகாத்து வருகின்றனர்.

காந்தி ஜெயந்தி அன்று கூட இந்த கல்வெட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியதாகும். எனவே மகாத்மா காந்தி வந்ததை நினைவு கொள்ளும் வகையிலும், பரமக்குடிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் அந்த இடத்தில் நினைவு தூண் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com