பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் - 329 பேர் கைது

பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் - 329 பேர் கைது
Published on

விழுப்புரம்,

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) விழுப்புரம் கிளை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திட்ட தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கரன், இணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சலீம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 187 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான 329 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com