ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை, கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு - பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை, கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு - பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
Published on

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சியில் பிரசித்திபெற்ற அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் அமைந்துள்ளது. குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு திருட்டு போனது.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், கல்லிடைக்குறிச்சி கோவிலில் இருந்து திருட்டு போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர்.

நேற்று முன்தினம் நடராஜர் சிலையானது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடராஜர் சிலையை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, நடராஜர் சிலை போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கடையம், அம்பை வழியாக கல்லிடைக்குறிச்சிக்கு நேற்று காலை 8.35 மணிக்கு வந்தது.

ஊர் எல்லையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது. அங்கு சிவனடியார்கள் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நின்றனர். பஞ்சவாத்தியம் மற்றும் வாண வேடிக்கை முழங்க நடராஜர் சிலைக்கு அவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் நடராஜர் சிலை இறக்கி வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 10.20 மணிக்கு குலசேகரமுடையார் கோவிலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

அங்கு கோவில் நிர்வாகத்திடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர் சிலையை வைத்து ஆனந்த தாண்டவம் நடைபெற்றது.பின்னர் உள்பிரகாரத்தை சுற்றி வந்து, நடராஜர் சன்னதியில் சிலை இறக்கி வைக்கப்பட்டதும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் வரிசையாக சென்று சிலையை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com