ஆடாசோலை பகுதியில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் மனு

ஆடாசோலை பகுதியில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
ஆடாசோலை பகுதியில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் மனு
Published on

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த வகையில், ஊட்டி அருகே ஆடாசோலை கிராமத்தை சேர்ந்த பெண்கள் வீடு கட்ட இடம் வழங்கக்கோரி கலெக்ட ரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தொட்டபெட்டா ஊராட்சி ஆடாசோலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சொந்த வீடுகள் இல்லாததால் நாங்கள் வாடகை வீடுகளில் குடியிருக்கிறோம். எனவே எங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எங்கள் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம் வழங்கப்பட வில்லை. இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஜெகதளா பஞ்சாயத்துக்கு உட்பட்ட குன்னூரில் இருந்து ஓதனட்டி கிராமத்துக்கு தனியார் மினி பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணம் ரூ.7-ல் இருந்து ரூ.12 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, அரசு பஸ்களில் கட்டணத்தை குறைத்தது போல், தனியார் மினி பஸ்களிலும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 201 மனுக்கள் பெறப்பட்டன. கட்டுமான பணியின் போது, சிமெண்ட் வளையம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த இடுஹட்டியை சேர்ந்த ரித்தீஸ்வரியின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com