பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: கமல்ஹாசன்- காயத்ரி ரகுராமிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: கமல்ஹாசன்- காயத்ரி ரகுராமிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்
Published on

கோவை,

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம், சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த வார்த்தை குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. அதை திருத்தம் செய்து ஒளிபரப்பி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

எனவே அவரது பேச்சுக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் 2 வாரத்துக்கும் மேலாகியும் மன்னிப்பு கேட்கவில்லை.

இதனால் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு எனது வக்கீல் மூலம் நடிகர் கமல்ஹாசன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோருக்கும், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு ஒருவார காலத்துக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.

அப்துல்கலாம் மண்டபத்தில் பகவத் கீதை அருகே குரான், பைபிள் வைத்தது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் திருக்குறளையும் வைத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தை தமிழக அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறது.

மத்திய அரசை விமர்சிக்க வேண்டும். மாநில அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் எதை எடுத்தாலும் விமர்சிக்கக்கூடாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழும் அப்துல்கலாம் பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com