சென்னை வருகைக்கு எதிர்ப்பு: பினராயி விஜயனின் உருவ பொம்மை எரிப்பு

பினராயி விஜயன் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் அவருடைய உருவ பொம்மையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வருகைக்கு எதிர்ப்பு: பினராயி விஜயனின் உருவ பொம்மை எரிப்பு
Published on

கும்பகோணம்,

சபரிமலை கோவில் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது, கோவிலின் புனித தன்மைக்கு எதிராக மாற்று மதத்தவரை கோவிலுக்குள் அனுமதித்தது உள்ளிட்ட செயல்களில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஈடுபட்டதாக கூறி, அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று பினராயி விஜயன் சென்னை வந்தார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட மாணவர் அணி தலைவர் பரத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தார். பாபநாசம் ஒன்றிய மாணவர் அணி தலைவர் லோகேஷ் வரவேற்றார்.

மாநில துணை பொதுச்செயலாளர் வேல்தர்மா, மாவட்ட செயலாளர் பாலா, பாபநாசம் ஒன்றிய தலைவர் ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பினராயி விஜயனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. முடிவில் திருவிடைமருதூர் ஒன்றிய மாணவர் அணி தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

இதேபோல் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், சென்னையில் நடந்த மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் இந்து மக்கள் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள், கருப்பு பலூன்களை பறக்க விட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் பினராயி விஜயன் உருவப்படத்தில் திரும்பி போ என வாசகங்களை எழுதி, கையில் வைத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com