வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உதவி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோத்தகிரி அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் உதவி கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உதவி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கீழ் ஓடென், ஓடென், ஜக்ககம்பை, உல்லத்தட்டி ஆகிய கிராமங்களில் வருவாய்துறைக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கோத்தகிரி தாசில்தார் மோகனா, வனவர் ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் வனத்துறையினரின் உதவியுடன் நேற்று காலை நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஓடேன் பகுதியில் உள்ள மைதானத்தில் ஒன்று திரண்டு நில அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தியதோடு, எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டியில் உள்ள எச்.பி.எப் தொழிற்சாலைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு அந்த நிலத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அதற்கு மாற்றாக தங்களது கிராம பகுதியில் உள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலத்தை கையகப்படுத்தினால் அந்த நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை பயிரிட்டு விவசாயம் செய்து, கந்தய வரிகளை கட்டி வரும் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே நில அளவை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அப்பகுதி முழுவதும் கருப்பு கொடிகளை கட்டி, ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் குன்னூர் உதவி கலெக்டர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அவர்களை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகள் கூறும்போது, நாங்கள் தற்போது நில அளவீடு செய்து ஆய்வுப்பணிக்காக மட்டுமே வந்து உள்ளதாகவும், நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர். ஆனால் சமாதானமடையாத மக்கள், ஏற்கனவே அஜ்ஜூர் பகுதியிலும், ஊட்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு வாகனம் அமைக்கும் இடத்திற்காக நிலம் கையகப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

எனவே விவசாயிகள் பாதிக்காத வகையில் வேறு பகுதியில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் நில அளவை செய்யாமல் அதிகாரிகள் திரும்ப செல்ல வேண்டும் என தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

அப்போது உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், கிராமங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறினார்.

இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com