

தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரெயில் நிலையம் முன்பு சாலையோரத்தில் விநாயகர் கோவில் உள்ளது. ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த கோவிலை அகற்ற வலியுறுத்தி, நெல்லையைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குரும்பூர் ரெயில் நிலைய முன்பு உள்ள விநாயகர் கோவிலை அகற்ற உத்தரவிட்டார்.இதையடுத்து கோவிலை அகற்றுவது தொடர்பாக, நெல்லை ரெயில்வே அதிகாரிகள் நேற்று முன்தினம் குரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவிலை அகற்றினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் அறிவுறுத்தியதால், கோவிலை அகற்றும் முடிவை ரெயில்வே அதிகாரிகள் கைவிட்டனர்.
இதற்கிடையே நேற்று காலையில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார் தலைமையில் ஏராளமானவர்கள் குரும்பூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் கண்ணன், ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ஜூலியட் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிலை அகற்ற மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து கோவில் பாதுகாப்பு குழு மாவடிபண்ணை ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.