மீண்டும் திறக்க எதிர்ப்பு: உருக்கு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே மீண்டும் திறக்க முடிவு செய்ததையடுத்து மூடப்பட்ட இரும்பு உருக்கு தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மீண்டும் திறக்க எதிர்ப்பு: உருக்கு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தாது மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வந்தது. தொழிற்சாலையால் அதிக அளவில் காற்று மாசு அடைவதாகவும், தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பில் கிராமத்திற்கு சொந்தமான நீர் நிலைகள் இருந்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து அந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், அந்த தொழிற்சாலையை மற்றொரு தனியார் நிறுவனம் வாங்கி மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது.

தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மூடப்பட்ட தொழிற்சாலையின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுப்பிரமணி, மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி, வருவாய் ஆய்வாளர் ரதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராம மக்கள் தங்களது 3 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com