உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: சோளத்தட்டு சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம் - வாழப்பாடி அருகே பரபரப்பு

வாழப்பாடி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று சோளத்தட்டு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: சோளத்தட்டு சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம் - வாழப்பாடி அருகே பரபரப்பு
Published on

வாழப்பாடி,

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தமிழகத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனங்கள் சார்பில், உயர் மின் கோபுரங்கள் அமைத்து 11 மின் திட்டங்களை செயல்படுத்த கடந்த 3 ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தை மாற்று வழியான புதைவடக்குழி அமைத்து கேபிள் மூலம் மின்பாதையை செயல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் உள்ள 8 இடங்களில் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும், 4 நாட்களாக 62 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து உண்ணா விரதம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி உண்ணாவிரத பந்தலில் தட்டு ஏந்தும் போராட்டம், தூக்கு கயிறு போராட்டம், இலை, தழைகளை இடுப்பில் கட்டி போராட்டம், இறந்தவர்களுக்கு குழியில் மண் தள்ளும் போராட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தியும் அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காத காரணத்தினால் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 5 பேரின் உடல்நிலை மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் குணமாகி மீண்டும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சேசன்சாவடியில் நேற்று 10-வது நாளாக தொடர் காத்திருக்கும் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மாடுகளை போன்று சோளத்தட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com