மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நிர்மலா, தாட்கோ மேலாளர் மாரிமுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தேவ்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

களக்காடு அருகே உள்ள கீழவடகரை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் போட்டனர். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், களக்காடு அருகே உள்ள கீழவடகரை பகுதியில் புதிதாக மதுக்கடை அமைத்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் செல்ல முடியாதநிலை ஏற்படும் எனவே அங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கள்மங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில் நாங்கள் எங்கள் குளத்தை நம்பி 240 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளோம். தற்போது குளத்தில் தண்ணீர் குறைந்து விட்டது. எனவே கொடுமுடியாறு அல்லது பச்சையாறு அணையில் இருந்து எங்கள் குளத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிட்டு நெல் பயிரை காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சேரன்மாதேவி அருகே உள்ள சங்கன்திரடு கிராம மக்கள், நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்கள் ஊர்மக்கள் மீது பொய் வழக்கு போட்டு அவதூறாக பேசுகிற போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்மாநில காங்கிரசார் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லிமுருகேசன், வர்த்தக அணி தலைவர் புன்னகை, சிறுபான்மைபிரிவு தலைவர் ஜெரீனா, மாவட்ட செயலாளர் ஜான்சிராணி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். மற்ற அமைப்பினருக்கு அனுமதி வழங்கி உள்ளனர். அது போல் எங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும். எங்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர் முன்னேற்ற சங்கத்தினர் எம்.ஜி.ஆர்., கமல், ரஜினி போன்ற நடிகர்கள் வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நெல்லை மாவட்டத்தில் மேடை நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும். போலீசார் அனுமதி வழங்குவதற்கும், பாதுகாப்புக்கும் கேட்கிற கட்டண தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

தமிழர் விடுதலை களத்தினர் மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிற இனிப்பு, காரம் செய்கின்ற கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவுக்கு மணல், ஜல்லி, கற்களை கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர் மனு கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com