ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: திருச்சி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: திருச்சி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
Published on

திருச்சி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அது கலவரமாக மாறியது. இதனால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமம் தேசிய தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று வாதாடியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சி காஜாமலையில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி) மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர்.

பின்னர் அங்கு கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, 14 பேரின் உயிர்த்தியாகம் வீணாகலாமா?, ஸ்டெர்லைட்டுக்கு கூலி வேலைபார்க்கும் போலீசே, தடை செய், தடை செய் ஸ்டெர்லைட்டை தடை செய் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியபடி மாணவர்கள் பங்கேற்றனர். 3-ம் ஆண்டு கணிதம் படிக்கும் மாணவர் சுரேஷ் தலைமையில் கபில், அபு, இளையராஜா உள்பட மாணவர்கள் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது, தூத்துக்குடி மக்களை தூக்கிவிடு தமிழா, ஜல்லிக்கட்டு பீட்டா காட்டுரேண்டா டாட்டா, தமிழ்நாட்டில் இருந்து ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம் என்பன உள்ளிட்ட கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com