வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு நாகர்கோவிலில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
Published on

நாகர்கோவில்,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு குமரி மாவட்ட காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பங்கேற்று அங்கு வைக்கப்பட்டு இருந்த துணை ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் துணை ராணுவ வீரர்களுக்கு குமரி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் புதுக்குடியிருப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் சிலம்பு சுரேஷ் பங்கேற்று ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேசத்தை பாதுகாப்பது தொடர்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் வடசேரி சந்திப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வேப்பமூடு சந்திப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபோன்று கணபதிநகர் ஊர்மக்கள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com