ஊரடங்கை மதித்து ‘சமூக தொற்று பரவாமல் தடுக்க வீட்டிலேயே இருங்கள்’ - பொதுமக்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள்

ஊரடங்கை மதித்து சமூக தொற்று பரவாமல் தடுக்க வீட்டிலேயே இருங்கள் என்று பொது மக்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கை மதித்து ‘சமூக தொற்று பரவாமல் தடுக்க வீட்டிலேயே இருங்கள்’ - பொதுமக்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை கலெக்டர் அண்ணாதுரை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றினால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் திண்டிவனம் நகர பகுதியில் 3 பேரும், அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் ஒருவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் சார்ந்த திண்டிவனம் நகராட்சி பகுதிகள், அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2,530 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,550 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதியுள்ள அனைவருக்கும் தனிமைக்காலம் முடிந்துள்ளது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் நகரை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக எந்தவொரு கொரோனா தொற்றும் புதிதாக ஏற்படவில்லை.

சமூக தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கை முழுமையாக மதித்து அனைவரும் மே 3-ந்தேதி வரை வீட்டிலேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேவையில்லாமல் வெளியே சுற்றினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். திரும்ப வழங்கப்பட மாட்டாது. இந்த வாரமும் விழுப்புரம் நகரில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் இயங்காது, அதுபோல் செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் இறைச்சி கடைகள், மீன் கடைகள் இயங்காது.

மாவட்டத்தில் இனிமேல் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதை கண்காணிக்க காவல்துறை, போலீஸ் நண்பர்கள் குழுவினர் மட்டுமின்றி 8 தாசில்தார்கள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 250 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை. அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே பணிகளை தொடர்ந்து கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com