பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை பாதிப்பை தக்க தருணத்தில் கண்டறிந்தால் பார்வை இழப்பை தடுக்கலாம் - கலெக்டர் தகவல்

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை பாதிப்பை தக்க தருணத்தில் கண்டறிந்தால் பார்வை இழப்பை தடுக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை பாதிப்பை தக்க தருணத்தில் கண்டறிந்தால் பார்வை இழப்பை தடுக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

கடலூர்,

குறைமாத மற்றும் எடைகுறைவு பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை பாதிப்பு குறித்து அரசு கண் மருத்துவர்களுக்கான கருத்தரங்கு கடலூர் தேவனாம்பட்டினம் இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது.

இக்கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அது சம்பந்தமாக கையேட்டை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உறுப்புகளில் வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. அவற்றில் ஒன்று விழித்திரை ரத்த ஓட்ட பாதிப்பு ஆகும். இதனை தக்க தருணத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் கண் பார்வையை காப்பாற்றலாம். இந்தியாவில் மொத்தமாக 38 சதவீத குழந்தைகள் 1700 கிராம் எடைக்கு குறைவான எடையுடன் பிறக்கின்றன. அதில் 20 சதவீத குழந்தைகளுக்கு விழித்திரை ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடலூரில் 2017-2018-ம் ஆண்டில் 29,685 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் ஏறத்தாழ 2,100 குழந்தைகள் 1,700 கிராம் எடைக்கு குறைவானவையாகவும், அதில் 400 குழந்தைகள் விழித்திரை பாதிப்புடைய குழந்தைகளாகவும் பிறந்துள்ளன.

நமது மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. இங்கு உத்தேசமாக ஒரு மாதத்திற்கு 200 முதல் 300 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றன.

குறைபாடுடைய குழந்தைகளை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதால் குழந்தைகள் ஆரோக்கியத்தோடு உயிர் வாழ்கின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2008-ம் ஆண்டு ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 24 என்ற விகிதத்தில் இருந்தது. அது தற்போது 1000-க்கு 17 விகிதமாக குறைந்து உள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் அதைவிட மிகக்குறைவாக, ஆயிரத்துக்கு 10.9 என்ற விகிதமாக உள்ளது.

தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்ததற்கு குறைந்த எடையுடன் அதாவது 1700 கிராம் எடைக்கு குறைவாக பிறந்த குழந்தைகளை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதே காரணமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ருக்மணி, உதவி இயக்குனர் மாதவி, மாநில பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குனர் சந்திரகுமார், இணை இயக்குனர் கலா, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் அசோக் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com