ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை-பணம் திருட்டு வாலிபர் கைது

நங்கநல்லூரில் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை, பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை-பணம் திருட்டு வாலிபர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் நேரு காலனி 21-வது தெருவைச் சேர்ந்தவர் பாலவேலாயுதம் தாஸ்(வயது 68). இவர் எண்ணூரில் உள்ள மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், புதிய கட்டிடம் கட்டுவதற்காக வீட்டின் பழைய கட்டிடத்தை இடித்து உள்ளார். அதில் ஒரு பகுதியில் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் பழவந்தாங்கல் பி.வி.நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது பற்றி பழவந்தாங்கல் போலீசில் அவர் புகார் செய்தார். பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மோகன்தாஸ், பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் பாலவேலாயுதம் தாஸ் வீட்டுக்கு பிளம்பர் வேலைக்காக அடிக்கடி வந்து செல்லும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (38) என்பவர்தான் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியது தெரிந்தது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.

திருட்டு நடந்ததாக புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் துப்பு துலக்கி திருடனை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com