

பொன்னேரி,
பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட பெரியகவனம் பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் சோலையப்பன் (வயது 60). இவர் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர் கடந்த 29-ந் தேதி பொன்னேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சார்ந்த யுகேந்திரன் (25) என்பவர் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சோலையப்பன் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த யுகேந்திரன் கையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் அவர் தலையில் அடித்து தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சோலையப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கைது
இதையடுத்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சோலையப்பன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சோலையப்பனின் மகன் தயாளன் (35) போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தி யுகேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் தலைமறைவாக இருந்த யுகேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.