கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் திரும்பிய அதிகாரிகள்

உளுந்தூர்பேட்டை அருகே கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் திரும்பிய அதிகாரிகள்
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அப்பகுதி கிராம மக்கள், ஊராட்சி செயலாளர் வெங்கடேசனிடம் தங்கள் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என புகார் கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல், பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் புறப்பட்டு சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே விஜயன்குப்பம் கிராமத்தில் நேற்று காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே அந்த கிராமத்தில் சுடுகாட்டு பாதை, தொகுப்பு வீடு வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூட்டம் நடைபெறும் போது, கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் முடிவு செய்திருந்தனர். இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் இளங்கோவன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார், உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கிராம சபை கூட்டம் நடக்கும் போது கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் கருப்பு கொடி காட்டும் முயற்சியை கைவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com