நெல்லை இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பரபரப்பு

நெல்லையில் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பரபரப்பு
Published on

நெல்லை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடைகளை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இறைச்சி கடைகளும் பல்வேறு இடங்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

நெல்லையில் தெருக்களில் செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதற்கு பதிலாக டவுன் ஆர்ச் இணைப்பு சாலை, கண்டியப்பேரி உழவர் சந்தை, பேட்டை தியேட்டர் வளாகம், பாளையங்கோட்டை பெல் மைதானம் ஆகியவற்றில் இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு இறைச்சி கடைகளை வியாபாரிகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் மாநகரம் முழுவதும் உள்ள அசைவ பிரியர்கள் அங்கு தினமும் சென்று இறைச்சி வாங்கி செல்கிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சி வாங்க வந்தவர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதையொட்டி போலீசார் அந்தந்த வளாகத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகளை அமைத்தனர். தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்று இறைச்சி வாங்கி செல்லும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன்களை வாங்கிச்சென்றனர். கடை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்த கடைகளில் மட்டும் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்றனர்.

மற்ற கடைகளில் கொரோனா ஆபத்தை உணராமல் சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் இறைச்சிகளை வாங்கிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com