

ஊட்டி
ஊட்டியில் உருளைக்கிழங்கு விலை உயர்ந்தது. இதனால் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
உருளைக்கிழங்கு சாகுபடி
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிபிளவர், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்த காய்கறிகள் சரக்கு வாகனங்கள் மூலம் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கிடையில் கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து காலிபிளவர், உருளைக்கிழங்கு அதிகளவில் நீலகிரிக்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் ஊட்டியில் விளைவிக்கப்படும் காலிபிளவர், உருளைக்கிழங்குக்கு போதிய விலை கிடைக்காமல் இருந்தது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டும் விலை கிடைத்தது. வரத்து குறைந்ததால் உருளைக்கிழங்கு விலை ரூ.50 ஆக அதிகரித்து உள்ளது.
அறுவடை பணி
இதனால் தற்போது ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கு கொத்து மூலம் வெளியே எடுக்கப்பட்டு, தரம் பிரித்து மூட்டைகளில் நிரப்பி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
உறைபனி காலம் என்பதால் காய்கறி செடிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் விளைந்த காய்கறிகள் மற்றும் நல்ல விலை கிடைக்கும் காய்கறிகளை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலை நிலவரம்
காய்கறிகள் விலை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஒரு கிலோ கேரட் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, காலிபிளவர் ரூ.30 முதல் ரூ.40, பீன்ஸ் ரூ.80, அவரை ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி பூண்டு வரத்து இல்லாததால் இமாச்சல பிரதேசத்தில் இருந்து வந்த பூண்டு கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.40, முருங்கைக்காய் ரூ.250 என விற்பனையாகிறது என்றனர்.