ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் நடைபயணம் சென்ற குமரிஅனந்தன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று சேலத்தில் பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் சென்ற குமரிஅனந்தன் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் நடைபயணம் சென்ற குமரிஅனந்தன் பேட்டி
Published on

சேலம்,

சேலம் நகரசபை தலைவராக ராஜாஜி இருந்தபோது முதன்முதலாக மதுவிலக்கை கொண்டு வந்தார். இதன் 100-வது ஆண்டையொட்டியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் சேலத்தில் நேற்று விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு தொடங்கிய இந்த நடைபயணத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடைபயணம் பழைய பஸ்நிலையம், திருவள்ளுவர் சிலை வழியாக ராஜாஜி சிலை வரை வந்தடைந்தது. இதையடுத்து ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடைபயணத்தின் போது தொண்டர் ஒருவர் காலி மதுப்பாட்டில்களை மாலையாக கட்டி கழுத்தில் தொங்கவிட்டவாறு வந்தார்.

முன்னதாக குமரிஅனந்தன் நிருபர்களிடம்கூறியதாவது:-

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கமாகும். அரசியல் கட்சியினர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, மீண்டும் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது. கொடுத்த வாக்குறுதிகளை மாற்றுபவர்கள் தெய்வத்தின் விரோதிகள் ஆவர். அண்ணா பெயரை வைத்துக் கொண்டு மதுக்கடைகளை திறப்பது புத்திசாலிதனமானது அல்ல.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும். வருகிற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில், மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று உறுதி கூறும் வேட்பாளர்களை வாக்காளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்திய அரசு பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வந்தால் ஆதரவு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com