சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 170 பேர் கைது

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 170 பேர் கைது
Published on

வேலூர்,

ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவது மற்றும் விடுமுறை நாளில் களப்பணி ஆய்வு செய்வதை நிரந்தரமாக நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோசப்கென்னடி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாரி, வேலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணராஜ் மற்றும் பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

தொடர்ந்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com