

ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி ஊராட்சியின் துணை கிராமமான லெட்சுமணாபுரத்தில் இருந்து மாமாந்தூர் செல்லும் தார்ச்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக இச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளதால் அவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி, செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை இங்கு புதிதாக சாலை அமைத்து தரவேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் பின்னர் அவர்களாகவே அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.