

தேனி,
சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகளை நடத்தினர். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுதல் குறித்த துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இதேபோல், நேரு சிலை சிக்னல் பகுதியில் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். இரவு நேரங்களில் முகப்பு விளக்குகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான வெளிச்சம், எதிரே வரும் வாகன ஓட்டிகளை திணற செய்வதை தவிர்க்கும் வகையில் இந்த கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அத்துடன், ஹெல்மெட் (தலைக்கவசம்) அணியாமல் வாகனம் ஓட்டியவர்களை பிடித்து, போலீசார் அறிவுரைகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டிதநேரு மற்றும் போலீசார் பங்கேற்றனர்.