

பள்ளிபாளையம்,
போக்குவரத்து துறை சார்பில் பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை மண்டல போக்குவரத்து ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். திருச்செங்கோடு வட்டார போக்குவத்து அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களின் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அமைச்சர் தங்கமணி, போக்குவத்து துறை சார்பில் சாலை விதிகள் குறித்த படக் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
இதில் செல்போன் பேசிக்கொண்டும், சீட் பெல்ட் அணியாமலும், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் ஏற்றிச்செல்லுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் சிக்னல் விளக்குகள் வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, திருச்செங்கோடு ஆய்வாளர் ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்ட போக்குவரத்து வட்டார அலுவலர் துரைசாமி, பள்ளிபாளையம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செந்தில், நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஸ்குமார், முருகேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.