ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வார விழா: விழிப்புணர்வு ஊர்வலத்தில் மொபட்டில் சென்ற கலெக்டர்

ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைக்கவசம் அணிந்து மொபட் ஓட்டி சென்றார்.
ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வார விழா: விழிப்புணர்வு ஊர்வலத்தில் மொபட்டில் சென்ற கலெக்டர்
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையில் போக்குவரத்து துறை சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வாரம் நேற்று தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் முத்துக்கடையிலிருந்து தொடங்கியது. ஊர்வலத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, தலைக்கவசம் அணிந்து மொபட் ஓட்டி சென்றார்.

ஊர்வலத்தில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் போலீசார், அலுவலர்கள் ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர். முத்துக்கடையில் தொடங்கிய ஊர்வலம் ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம், ஆற்காடு நகரம், ராணிப்பேட்டை பஜார், காரை கூட்ரோடு, நவல்பூர் பகுதி வழியாக வந்து மீண்டும் முத்துக்கடையில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வட்டார போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, மோட்டார்வாகன ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க தலைவர் மணி, இரு சக்கர வாகன ஓட்டுனர் நலச்சங்க தலைவர் ஜெகன்நாதன் மற்றும் ரோட்டரி, அரிமா சங்கத்தினர் அரசு அலுவலர்கள், பல்வேறு சமூக சேவை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com