முழுஊரடங்கால் நெல்லை முடங்கியது தூத்துக்குடி, தென்காசியில் சாலைகள் வெறிச்சோடின

முழுஊரடங்கால் நேற்று நெல்லை முடங்கியது. தூத்துக்குடி, தென்காசியில் சாலைகள் வெறிச்சோடின.
முழுஊரடங்கால் நெல்லை முடங்கியது தூத்துக்குடி, தென்காசியில் சாலைகள் வெறிச்சோடின
Published on

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதையொட்டி பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் ஆகிய மண்டல பகுதியில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

இறைச்சி கடைகள் அடைப்பு

பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் 3 பூங்காக்களில் அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தைகள், பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு பகுதி மற்றும் பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நெல்லை டவுன் ஆர்ச் பகுதியிலும், பாளையங்கோட்டை பெல் மைதானத்திலும் நேற்று ஊரடங்கால் அனைத்து இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, வடக்கு புறவழிச்சாலை, திருவனந்தபுரம் ரோடு, மேலப்பாளையம் ரவுண்டானா, அம்பை சாலை, நெல்லை டவுன் ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று வாகனங்கள் ஓடாததால் அந்த சாலைகள் வெறிச்சோடின. மொத்தத்தில் முழு ஊரடங்கால் நெல்லை முடங்கியது.

போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லையில் வண்ணார்பேட்டை ரவுண்டானா, கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை, சந்திப்பு அண்ணா சிலை, பாளையங்கோட்டை, டவுன், மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முழுஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் ரோந்தும் சுற்றி வந்தனர். ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தென்காசி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. பெட்ரோல் பங்க்குகளும் அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள், கூலக்கடை பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கீழ ஆவணி மூல வீதி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அவசர அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்டம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பால் கடைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே ஆங்காங்கே திறந்து இருந்தன. ஆனாலும் அங்கு வாங்குவதற்கு ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியதால், தூத்துக்குடியில் எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய பை-பாஸ் சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடின.

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் சாலையில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைவாக இருந்தது. முழு ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com