அவினாசி, சேவூர், பல்லடம் பகுதிகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின

அவினாசி, சேவூர், பல்லடம் பகுதிகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அவினாசி, சேவூர், பல்லடம் பகுதிகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின
Published on

அவினாசி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நேற்று மக்கள் ஊரடங்கு நடத்த பிரதமர் அறிவித்தார். அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது

திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஆட்டையாம்பாளையம், பழங்கரை. தெக்கலூர், கருவலூர், உள்ளிட்ட அவினாசி ஒன்றியத்திலுள்ள 31 ஊராட்சி பகுதியிலும் தொழில் நிறுவனங்கள், சிறு பெட்டிக் கடை முதல் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஒட்டல்கள், பேக்கரிகள், வணிக நிறுவனங்கள், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன

எப்போதும் கூட்டமாக காணப்படும் அவினாசி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரு ஆள் கூட வரவில்லை. எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பு, அவினாசிலிங்கம்பாளையம் பைபாஸ் ரோடு, கோவை ஈரோடு மெயின் ரோடுகளில் ஒருசில இருசக்கர வாகனத்தை தவிர எந்த வாகன போக்குவரத்தும் இல்லாமல் காணப்பட்டது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அவினாசி நகரில் உள்ள இறைச்சி கடைகளில் மட்டும் வியாபாரம் நடைபெற்றது.

இதுபோல் சேவூர் பகுதியிலும், அதிகாலை முதலே அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், கார், ஆட்டோக்கள் இயங்கவில்லை. மேலும் சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம புறங்களில் மளிகை கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள், ஜவுளி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பனியன் நிறுவனங்கள், விசைதறிக் கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன.

சேவூர், புளியம்பட்டி சாலையில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஊரடங்கையொட்டி ஆராதனைகள் நடைபெறவில்லை. சேவூரில் அத்தியாவசிய தேவையான ஆவின்பாலகங்கள், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன. சேவூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஓரிரு நோயாளிகளே வந்திருந்தனர். இதனால் சேவூர் அரசு மருத்துவமனை வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய இடங்களில் சேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மக்கள் சுய ஊரடங்கையொட்டி பல்லடத்தில் உள்ள என்.ஜி.ஆர் ரோடு,மங்கலம் ரோடு,மாணிக்காபுரம் ரோடு, தினசரி மார்க்கெட்,அண்ணா வணிக வளாகம் ஆகிய இடங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்ததால் பல்லடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. . ஒரு சில இடங்களில் அதிகாலையில் திறக்கப்பட்ட இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. மாலை 5 மணியளவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு நின்று கைகளை தட்டி கொரேனாவை அழிக்க போராடி வரும் மருத்துவர்களுக்கும் சுகாதார துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com