கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடின

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி நேற்று கோவையில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடின
Published on

கோவை

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி கோவையில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

கொரோனா தொற்று பரவல்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அப்போது பகல் 12 மணி வரை கடைகள் திறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறையாமல் இருந்தது. தொற்று பரவும் நிலை இருந்தது.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முழு ஊரடங்கு

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

ஏ.டி.எம்., பெட்ரோல், டீசல் பங்க்குகள், ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நடைபாதை கடைகள், டீ கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

போலீசார் தீவிர கண்காணிப்பு

இதனால் கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் பால், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை திறந்து இருந்தன. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன..

அவினாசி சாலை மேம்பாலம், காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

இதற்காக மேம்பாலங்களில் வாகனங்கள் செல்லாதவாறு இரும்பு தடுப்புகளை போலீசார் வைத்து இருந்தனர். மேலும் கோவையில் முக்கிய சாலைகளின் சந்திப்பு மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முழு ஊரடங்கு உத்தரவை மீறி காரணமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்தவர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, எல் அண்டு டி பைபாஸ் சாலை, மருதமலை சாலை உள்பட மாநகர் மற்றும் புறநகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்ததை காணமுடிந்தது.

அம்மா உணவகங்கள் உள்பட ஒரு சில உணவகங்கள் மட்டுமே செயல்பட்டது. பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்பட வில்லை. இதனால் வெளியூரில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு கோவை வந்த டிரைவர்கள் லாரிக்கு உள்ளேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை கண்டறிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com