

பொள்ளாச்சி,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கோட்டூர் ஆகிய பகுதிகளில் இறைச்சி, மளிகை, காய்கறி என எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள், பால் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சியில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, தேர்நிலையம் உள்பட பல இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் வந்தவர் களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அவசர தேவைகளுக்காக செல்பவர்களை மட்டுமே அனுமதித்தனர். தேவை இல்லாமல் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையில் கூட்டங்கூட்டமாக நின்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அவ்வப்போது மழையும் பெய்து கொண்டு இருந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இதனால் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. உணவின்றி தவித்த முதியவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தன்னார்வலர்கள், போலீசார் உணவு வழங்கினார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, முழு ஊரடங்கு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.
முழு ஊரடங்கையொட்டி கிணத்துக்கடவில் ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு, சிக்கலாம்பாளையம், தாமரைகுளம், கோவில்பாளையம், கிணத்துக்கடவு பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் மளிகைக்கடை மற்றும் காய்கறி கடைகள், டீகடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. கிணத்துக் கடவு பஸ்நிறுத்தம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.