

வந்தவாசி,
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பெரியகாலனி பகுதிக்கு கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 11-45 மணியளவில் பாலுடையார் தெரு- சன்னதிதெரு சந்திப்பிலும், குளத்துமேட்டு சாலையிலும் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் காலிபானைகளை தரையில் போட்டு உடைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக மாலைக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
போராட்டம் சுமார் 45 நிமிடம் நடந்தது.