சிங்கம்புணரி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

சிங்கம்புணரி பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
சிங்கம்புணரி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி நகரம் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது. மேலும் தனித்தாலுகா அந்தஸ்து பெற்று விளங்கி வரும் சிங்கம்புணரி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் சிங்கம்புணரி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் விதிகளை மீறி, சாலை வரை சுமார் 10 அடிகளுக்கு மேல் தங்களது கடைகளை நீடிப்பு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அளவெடுக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் சாலை அளவை குறியீடு செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை 10 நாட்களுக்குள் அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் கொடுத்த 10 நாட்கள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று காலை ஜே.சி.பி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. முதலில் சிங்கம்புணரி 4 ரோடு முன்பு தொடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பெரிய கடைவீதி, தொடக்கப்பள்ளி எண் 2 வரை நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, சிங்கம்புணரி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிச்சை தலைமையில் தாசில்தார் கண்ணன், செயல் அலுவலர் சண்முகம், வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர், மின்சார துறையினர், தேர்வு நிலை பேரூராட்சி துறையினர் சிங்கம்புணரி போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் தற்போது அகற்றப்பட்டு மீண்டும் சாலைவிரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடை உரிமையாளர்கள் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இட வசதியுடன் காணப்படுவதால் மழைக் காலங்களில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் உள்ளது.

மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிங்கம்புணரியில் உள்ள திண்டுக்கல்-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவதற்காக சாலை அளவிடும் பணி தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com