

சேலம்,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் சதீஷ் தலைமை தாங்கி மளிகை பொருட்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தேவையான மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் 200 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, மஞ்சள், சாம்பார் பொடி, மிளகாய் மற்றும் மல்லித்தூள், கோதுமை, சர்க்கரை, எண்ணெய், உப்பு, புளி, சோப்பு உள்பட 16 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக அனைத்து சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களுக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்படும்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர் என 3 ஆயிரம் பேருக்கு தினமும் மாநகராட்சி சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.