

சரவணம்பட்டி,
கோவை மாவட்டம் சரவணம்பட்டி கரட்டுமேட்டில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மலை சுற்றுப்பாதையில் அப்பகுதி மக்கள் நேற்று காலை 6 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 3 வயது பெண் குழந்தை தலையில் காயத்துடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள், சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் குழந்தையை காணவில்லை எனக்கூறி ஒரு பெண் அந்த பகுதியில் தேடிக்கொண்டு இருந்தாள்.
இறந்து கிடந்த குழந்தையின் போட்டோவை காண்பித்தபோது இது தன்னுடைய குழந்தைதான் எனக் கூறினாள். உடனே அவளை குழந்தை பிணமாக கிடந்த பகுதிக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார் கள். அப்போது குழந்தை தேவிஸ்ரீயை தனது கள்ளக்காதலன் தமிழ், பாட்டி வீட்டில் விட்டு வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவரை காணவில்லை என்று கூறினாள். இதனால் அந்த பெண் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதைதொடர்ந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக தாய் ரூபினி ஒப்புகொண்டாள். உடனே அவளை போலீசார் கைது செய்தனர். ரூபினி போலீசில் அளித்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-
மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியில் ரூபினி (வயது30) வசித்து வந்தாள். இவளுடைய கணவர் பால்ராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர்களுடைய குழந்தை தேவிஸ்ரீ (3). கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தை தேவிஸ்ரீ, தாயிடம் வசித்து வந்தாள்.
இந்தநிலையில் சினிமா படப்பிடிப்பு குழுவுக்கு தொழிலாளர் களை சப்ளை செய்யும் தமிழ்(36) என்பவர் ரூபினியின் செல்போன் எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர் என்று போன் இணைப்பை துண்டித்தாலும் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டதால் ரூபினி பேசியுள்ளாள். தமிழ் ஆறுதல்கூறும் வகையில் பேசியதால், அவரது பேச்சில் மயங்கிய ரூபினி தனது நிலையை கூறியுள்ளாள். 3 மாத பழக்கம் நட்பாகி கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். தங்களது கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக இருவரும் கருதினார்கள். இதைதொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தையை தீர்த்து கட்ட இருவரும் திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று சரவணம்பட்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் தடவி கொடுத்துள்ளனர். அந்த பிஸ்கட்டை தாய் ரூபினி குழந்தை தேவிஸ்ரீக்கு ஊட்டினாள். குழந்தையும் பிஸ்கட்தானே என்று ஆசையுடன் சாப்பிட்டது. சிறிதுநேரத்தில் குழந்தை வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தது.
குழந்தை இறந்ததும், கள்ளக் காதலன் தமிழிடம் கொடுத்து எங்காவது கொண்டு வீசி விட்டு வருமாறு கூறியுள்ளாள். தமிழ், அந்த குழந்தையை கரட்டுமேடு பகுதியில் உள்ள புதரில் வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்த தகவலை ரூபினி போலீசில் கூறினாள். குழந்தையை முட்புதரில் தூக்கி வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதலன் தமிழை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.