ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி உணவு பொருட்கள் வீணாகிறது - இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் தகவல்

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி உணவு பொருட்கள் வீணாகிறது என இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் கூறினார்.
ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி உணவு பொருட்கள் வீணாகிறது - இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் தகவல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் பொன்விழா ஆண்டையொட்டி உணவு பதன தொழில்நுட்பத்தில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கம் வருகிற 17-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு தொடங்குகிறது.

இந்த கருத்தரங்கை மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கெஜர் பாதல் தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, வேளாண்மை அறிஞர் எம்.எஸ்.சுவாமி நாதன், மத்திய உணவு பதன தொழில் அமைச்சக செயலாளர் ஜக்தீஷ் பிரசாத் மீனா, பொருளாதார ஆலோசகர் பிஜயாகுமார் பெகெரா உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கருத்தரங்கம் வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது.

இது குறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல் பதன ஆய்வு மையமாக இருந்த இந்த நிறுவனம் 2007-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு உணவு பதன தொழில்நுட்ப நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் நெல் மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டது. தற்போது சிறுதானியங்கள், பால் பொருட்கள், மீன் போன்றவையும் ஆய்வு செய்யப்படுகிறது. பொன்விழா ஆண்டையொட்டி விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குதல் என்ற நோக்கத்தில் 3 நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

நீரா பானத்தை மரத்தில் இருந்து இறங்குவது தொடர்பாக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள தேங்காய் சிப்ஸ், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு வெங்காயத்துக்கான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தென்னை தொடர்பான தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தக்காளிக்கான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட உள்ளன.

நம் நாட்டில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகிறது. இந்த பொருட்களை எப்படி பாதுகாத்து பதப்படுத்துதல் என்பது தான் எங்களது நோக்கம். தென்னை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் நீரா பானத்தை 4 மணி நேரம் தான் பாதுகாத்து வைக்க முடியும். இதை நீண்டநாட்கள் பாதுகாத்து, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய பதப்படுத்துதல் மிகவும் முக்கியம். இதற்கான ஆய்வு நடைபெறுகிறது.

சிறுதானியங்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பலாப்பழ தோலை பொடி செய்து கோன் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பலாப்பழ தோல் மூலம் தட்டு செய்ய முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com