

விழுப்புரம்,
விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய உறவினர்களான திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோமதிவிநாயகம், அவரது மனைவி ஷோபனா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக விழுப்புரம் நரசிங்கபுரத்திலுள்ள சங்கர் வீட்டின் கீழ்பகுதியில் வசித்து வந்ததோடு அவருடைய காய்கறி கடையில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் சங்கர், காய்கறி வியாபார வசூல் பணமான ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை கோமதிவிநாயகம், ஷோபனா ஆகியோரிடம் கொடுத்து வங்கியில் செலுத்தும்படி கூறிவிட்டு சொந்த வேலையாக புதுச்சேரிக்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து விழுப்புரம் வந்து பார்க்கும்போது கோமதிவிநாயகம், ஷோபனா ஆகிய இருவரும் வீட்டில் இல்லை.
தம்பதிக்கு வலைவீச்சு
உடனே அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு சங்கர் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும், பணத்தை வங்கியில் செலுத்தாமல் தாங்கள் எடுத்துக்கொண்டதாகவும், பணத்தை திருப்பி தரமுடியாது என்றும் உன்னால் என்ன செய்ய முடியும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் கோமதிவிநாயகம், ஷோபனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.